Tuesday, December 25, 2007

வளர்ச்சி எனப்படுவது யாதெனின்....

நடந்து முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் கொலைகாரன் மோடி (சிலருக்கு மாவீரன் மோடி, சிலருக்கு இந்து இதயங்களின் அரசன், சிலருக்கு வளர்ச்சி நாயகன், ஆனால் எனக்கு மோடியும் ஒசாமாவும் ஒன்றுதான்) பெற்ற வெற்றி அவரது வளர்ச்சித் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி. குஜராத்தின் காவிக் காமாலை நோய்வாய்ப்பட்ட (புத்திசாலி ?!!) மக்களைப் போலவே தமிழக மக்களும் சிந்திக்க வேண்டும் என கோயபெல்ஸ்கள் பதிவுகள் எழுதி வரும் இவ்வேளையில் வளர்ச்சி என்பதற்கு உண்மையான விளக்கத்தை அளிக்கவே இப்பதிவு.


நான் படித்தவரை (நான் குஜராத்திற்கு இதுவரை சென்றதில்லை என்பதனால்) குஜராத்தில் நகரங்கள் மற்றும் கிராமங்கள், தொழிற்துறை மற்றும் விவசாயத்துறை, வளர்ச்சிக் கண்ட மற்றும் வளர்ச்சி காணாத குஜராத், இவற்றிற்கிடையேயான இடைவெளி மிக மிக அதிகம்.


90 க‌ளில் ம‌ற்றும் 21ம் நூற்றாண்டின் முத‌ல் சில‌ வ‌ருட‌ங்க‌ளில் இந்தியாவின் 15 பெரிய‌ மாநில‌ங்க‌ளில் தொழிற்துறை முத‌லீடுக‌ளை ஈர்ப்ப‌தில் முத‌ல் மூன்று இட‌ங்க‌ளில் ஒன்றில் தொட‌ர்ந்து இட‌ம்பிடித்து வ‌ருகிற‌து (இதில் 15 பெரிய மாநிலங்கள் என்பது ஜார்கண்ட், உத்தராஞ்சல், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்கள் உருவாக்க‌ப்ப‌ட்ட‌த‌ற்கு முந்தைய‌ நிலைமை) 80 க‌ளின் ம‌த்தியில் குஜ‌ராத் தொழிற்துறை வ‌ள‌ர்ச்சியில் இந்தியாவில் இர‌ண்டாம் இட‌த்தில் இருந்தது. (அப்போதெல்லாம் காவிக் கூட்ட‌ம் ஆட்சியில் இருக்க‌வில்லை) பின்ன‌ர் தாராள‌ம‌ய‌மாக்க‌லின்போது முற்போக்கான தொழிற்க் கொள்கையின் கார‌ணமாக‌ தொழிற்துறை முதலீடுக‌ளுக்கு முக்கிய‌மான‌ இலக்காக‌ விளங்கி வ‌ந்த‌து. ஆனால் அந்த‌ தொழிற்துறை முத‌லீடுக‌ளின் தீவிர‌த்த‌ன்மையின் கார‌ணமாக‌ த‌னி ம‌னித‌ வ‌ருமான‌த்தில் (Per Capita Income) எந்த‌ வ‌ள‌ர்ச்சியும் எற்ப‌ட‌வில்லை. 90 களின் ஆரம்பத்திலிருந்தே தனிமனித வருமான வருமான விகிதத்தில் குஜராத் நான்காம் (1997-98 க்கும் 2001-02 க்கும் இடையே ஐந்தாம் மற்றும் ஆறாம் இடத்திற்கு இறங்கியதைத் தவிர) இடத்திலேயே இருந்து வருகிறது. மேலும் குஜராத்தின் பொருளாதார வளர்ச்சி அம்மாநில மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதில் எள்ளளவும் உதவவில்லை என்பதே உண்மை. 1991 ம் ஆண்டில் இந்தியாவின் 15 பெரிய மாநிலங்களில் Human Development Index எனப்படும் மனித வளர்ச்சி விகிதத்தில் நான்காம் இடத்திலும் Gender Development Index எனப்படும் ஆண்-பெண் வளர்ச்சி விகிதத்தில் ஐந்தாம் இடத்திலும் இருந்த குஜராத் மாநிலம் 2001 ம் ஆண்டில் முறையே ஐந்தாம் மற்றும் ஆறாம் இடத்தில் இறங்கியிருந்தது. 2001 ம் ஆண்டில் கல்வி வளர்ச்சியில் ஆறாமிடத்திலும், சுகாதார விகிதத்தில் ஒன்பதாம் இடத்திலும், சுற்றுப்புற சூழல் விகிதத்தில் பதிமூன்றாம் இடத்தில் குஜராத் இருந்தது. மொத்தத்தில் பொருளாதார வளர்ச்சியை தவிர அனைத்து துறைகளிலும் குஜராத் மாநிலம் பின்தங்கியே இருந்து வருகிறது.(இதில் 1995 ம் ஆண்டிலிருந்து இன்று வரை பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே ஆட்சி புரிந்து வருகின்றன)

இதில் ஆறறிவுள்ள மனிதர்களுக்கு எழும் கேள்வி என்னவென்றால் மிகச் சிறந்த நிர்வாகியாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் மோடி இந்த பின்தங்கிய நிலைமையிலிருந்து குஜராத்தை மீட்டுவிட்டாரா என்பதுதான். கடந்த ஆறு வருட ஆட்சியில் தேய்ந்து வந்த Net State Domestic Product (NSDP) எனப்படும் மாநிலத்தின் மொத்த உற்பத்தியை நிமிர்த்தியதைத் தவிர வேறு எதுவும் அவர் சாதித்ததாக தெரியவில்லை. வளர்ச்சிக் கண்ட மற்றும் வளர்ச்சி காணாத பகுதிகள், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம், பொருளாதார வளர்ச்சி மற்றும் தனிமனித நல்வாழ்வு, இவற்றிற்கிடையேயான இடைவெளி இன்னும் இருந்துக்கொண்டுதான் இருக்கிறது.Infant Mortality Rate (IMR) எனப்படும் சிசு மரண விகிதத்தை எடுத்துப் பார்த்தாலே அவரது வளர்ச்சி முகமூடி கிழிந்துவிடும். 2005ம் ஆண்டில் குஜராத்தின் சிசு மரண விகிதம் 1000 குழந்தைகளுக்கு 54 ஆகவும், இந்தியாவின் சிசு மரண விகிதம் 1000 குழந்தைகளுக்கு 58 ஆகவும் இருந்தது. அதாவது இந்தியாவின் மொத்த சிசு மரண விகிதம் குஜராத் மாநிலத்தை விட 7 சதவிகிதம் அதிகம். இதுவே 1991 ல் இந்தியாவின் சிசு மரண விகிதம் 80 ஆகவும் குஜராத்தின் சிசு மரண விகிதம் 68 ஆகவும் இருந்தது. அதாவது இந்தியாவின் சிசு மரண விகிதம் குஜராத்தை விட 16 சதவிகிதம் அதிகமாக இருந்திருக்கிறது.

மேலோட்ட‌மாக பார்த்தால் இந்தியாவிற்கும் குஜராத்திற்கும் இடையேயான சிசு மரண விகித வித்தியாசம் 16 ச‌த‌விகித‌த்திலிருந்து 7 ச‌த‌விகிதமாக‌ குறைந்திருக்கிற‌து. இது முன்னேற்ற‌ம் என்றுதான் தோன்றும். ஆனால் உண்மை அதுவ‌ல்ல‌. ம‌ற்ற‌ மாநில‌ங்க‌ளின் சிசு ம‌ர‌ண‌ விகித‌ம் வேகமாக குறைந்ததால்தான் இந்த‌ வித்தியாச‌ம் குறைந்திருக்கிற‌து. ஒரு மாநில‌த்தின் (கேரளாவைப் போல) சிசு ம‌ர‌ண விகித‌ம் குறையும்போது தேச‌த்தின் சிசு ம‌ர‌ண‌ விகித‌த்திற்ககும் அம்மாநில‌த்தின் சிசு ம‌ர‌ண‌ விகிதத்திற்கும் இடையேயான‌ இடைவெளி குறைவ‌து இய‌ற்கையே. இருப்பினும் குஜ‌ராத்தின் சிசு ம‌ர‌ண‌ விகித‌ம் ச‌ற்று அதிக‌மே. 2005 ல் குஜ‌ராத் இந்தியாவின் 18 பெரிய மாநில‌ங்க‌ளில் (ஜார்க்க‌ண்ட், உத்திராஞ்ச‌ல், ச‌ட்டீஸ்க‌ர் உட்ப‌ட‌) சிசு ம‌ர‌ண விகித்த‌தில் 9 ம் இட‌த்தில் இருந்த‌து. 2001 ல் 60 ஆக இருந்த குஜராத்தின் சிசு ம‌ர‌ண‌ விகித‌ம் 2005 ல் 54 ஆக‌ குறைந்திருந்தாலும், இந்தியாவின் ம‌ற்ற‌ மாநில‌ங்க‌ளை காட்டிலும் இது மிக‌ மிக‌ மோச‌மான‌ முன்னேற்ற‌மே. கேர‌ளாவில் 14 ஆக‌வும், ம‌காராஷ்டிராவில் 34 ஆகவும், த‌மிழ்நாட்டில் 37 ஆக‌வும், மேற்கு வ‌ங்காள‌த்தில் 38 ஆக‌வும், இவ்வ‌ள‌வு ஏன் நேற்று உருவாக்க‌ப‌ட்ட‌ உத்தராஞ்ச‌லில் 42 ஆகவும், ஜார்க்க‌ண்டில் 50 ஆக‌வும் இருக்கும் சிசு ம்ர‌ண‌ விகிதம், வ‌ளர்ச்சி க‌ண்ட‌ மாநில‌மாக‌ பொய்ப் பிர‌ச்சார‌ம் செய்ய‌ப்ப‌டும் குஜ‌ராத்தில் ம‌ட்டும் 54 ஆக‌ இருப்ப‌தேனோ?.சிசு ம‌ர‌ண‌ விகித‌ம் என்ப‌து பெண்க‌ளின் ந‌ல்வாழ்வு ம‌ற்றும் குறிப்பாக‌ க‌ர்ப்பிணி பெண்க‌ளுக்கு கிடைக்கும் நோய்தடுப்பு மருந்துகள் மற்றும் சரியான ஊட்டச்சத்துப் போன்ற முறையான‌ ம‌ருத்துவ‌ வ‌ச‌திக‌ளை ப‌ற்றிய‌ உண்மைக‌ளை வெளிக்காட்டும் முக்கிய‌மான‌ அடையாள‌ குறியீடு ஆகும்.


மேலும் இந்த‌ புள்ளிவிவ‌ர‌ங்க‌ள் குழ‌ந்தைக‌ளுக்கான‌ நோய்த்த‌டுப்பு திட்ட‌ங்க‌ள், மற்றும் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்ப‌டை பொது சுகாதார‌ம் ஆகிய‌வ‌ற்றின் அவ‌ல‌ நிலையை எடுத்து கூறுகிற‌து. ஒரு சிசுவை அல்லது க‌ர்ப்பிணி பெண்ணை அந்த‌ குடும்ப‌த்தைச் சேர்ந்த‌வ‌ர்களால் ச‌ரியாக‌ க‌வனிக்க‌ முடியாம‌ல் போகும் ப‌ட்ச‌த்தில் அவ‌ர்க‌ளுக்கு அடிப்ப‌டை ம‌ருத்துவ‌ வ‌சதியை அளிப்ப‌து அந்தந்த‌ மாநில‌ அர‌சுக‌ளின் பொறுப்பாகிற‌து. ஆனால் குஜ‌ராத் அர‌சைப் பொறுத்த‌வ‌ரை இந்த‌ பொறுப்பிலிருந்து பிற‌ழ்ந்திருப்ப‌தாக‌வே தெரிகிற‌து. குஜ‌ராத்தின் முக்கிய‌ப் பிர‌ச்சினையே அதன் கிராம‌ப்புற‌ங்க‌ளில் அதிக‌மாக‌ இருக்கும் சிசு மர‌ண‌ விகித‌ம்தான். 1991 ம் ஆண்டில் 73 ஆக இருந்த‌ 2004 ல் 62 ஆக‌ குறைந்திருந்த‌து. இது இந்தியாவின் கிராம‌ப்புற‌ சிசு ம‌ர‌ண விகித‌ம் 64 ஐ விட அவ்வ‌ள‌வு ஒன்றும் குறைவாக‌வில்லை. இந்தியாவின் ம‌ற்ற‌ மாநில‌ங்க‌ள் கிராம‌ப்புற‌ சுகாதார‌த்தில் குஜ‌ராத்தை காட்டிலும் ந‌ல்ல‌ வ‌ள‌ர்ச்சியை க‌ண்டிருப்ப‌தென்ன‌வோ உண்மைதான். கிராம‌ப்புற‌ சுகாதார‌த்தை இப்ப‌டி ஒட்டுமொத்த‌மாக‌ புற‌க்க‌ணிப்ப‌து குஜ‌ராத் மாநில‌த்தின் த‌வ‌றான‌ வ‌ள‌ர்ச்சிக் கொள்கையின் ஒரு முக்கிய சாரம்சமாகவே தெரிகிற‌து. 90 க‌ளில் பா.ஜ‌.க‌ ஆட்சியில் மோச‌மாக‌ இருந்து வ‌ந்த‌ குஜ‌ராத்தின் கிராம‌ப்புற‌ சுகாதார‌ம் மோடியின் ஆட்சிக் கால‌த்தில் மேலும் சீர‌ழிந்துவிட்டதாக‌வே புள்ளி விவ‌ர‌ங்க‌ள் தெரிவிக்கின்ற‌ன.

இத‌னினும் கொடுமை என்ன‌வென்றால் குஜ‌ராத் அர‌சு (தனியார் மயப்படுத்தபட்ட) ச‌ஞ்சீவ‌னி யோஜ‌னா எனும் மகப்பேறு திட்டத்தை பழங்குடியினர் (அவர்கள் காலம்காலமாக காங்கிரசுக்கு வாக்களித்து வருவதால்) வாழும் பகுதிகளுக்கு கொண்டு செல்லாததுதான். நொடித்து இருந்த‌ சுகாதார‌த் துறையை சீர்ப்ப‌டுத்துவ‌தை விடுத்து அதை த‌னியாருக்கு தாரைவார்த்த‌துதான் இத்துறையில் க‌ர்ம‌யோகி மோடி செய்த‌ சாத‌னை. 2005-06 ல் எடுக்கப்பட்ட National Family Health Survey (NFHS) என‌ப்ப‌டும் தேசிய‌ குடும்ப‌ந‌ல‌ க‌ண‌க்கெடுப்பின்ப‌டி குஜ‌ராத்தில் 5 வய‌துக்குட்ப‌ட்ட‌ குழ‌ந்தைக‌ளில் 47 ச‌த‌விகித‌ குழ‌ந்தைக‌ள் ஊட்ட‌ச்ச‌த்து குறையினால் எடைக்குறைந்து இருக்கிறார்கள். இது 1998-99 ம் ஆண்டு NFHS க‌ண‌க்கெடுப்பின்போது க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்ட‌ 45 ச‌த‌விகிதத்தை விட‌ அதிகம்.


கடைசியாக குஜராத்தில் சமூகநலத் துறைக்கான அரசின் நிதி ஒதுக்கீடு 1990 ம் ஆண்டுக்குப் பிறகு குறைந்திருக்கிறது. 2007ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய‌ ரிசர்வ் வங்கி வெளியிட்ட மாதந்திர நிலவர அறிக்கையின்படி இந்தியாவின் 18 பெரிய‌ மாநில‌ங்க‌ளில் ச‌மூக‌ ந‌ல‌த்துறைக்கு 31.6 ச‌த‌விகித‌ம் ம‌ட்டுமே ஒதுக்கீடு செய்து குஜ‌ராத் 17 வ‌து இட‌த்தில் இருந்த‌து. ப‌ஞ்சாப் மாநில‌த்தைத் த‌விர‌ (புதிதாக‌ உருவாக்க‌ப்ப‌ட்ட‌ ச‌ட்டீஸ்க‌ர், உத்த‌ராஞ்ச‌ல், ஜார்க்க‌ண்ட் உட்ப‌ட‌) ச‌மூக‌ ந‌ல‌த்துறைக்கு அதிக‌ நிதி ஒதுக்கீடு செய்திருப்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. 1991 ல் ச‌மூக‌ ந‌ல‌த்துறைக்கான‌ ஒதுக்கீட்டில் இந்தியாவில் 15 பெரிய‌ மாநில‌ங்க‌ளில் 12 வ‌து இட‌த்தில் இருந்தது குஜராத். மோடியின் ஆட்சிக்கால‌த்தில்தான் குஜ‌ராத்தின் ச‌மூக‌ ந‌ல‌த்துறை மிக‌ மோச‌மான‌ நிலைக்குத் த‌ள்ள‌ப்ப‌ட்டுள்ள‌து.


Human Development Index என‌ப்ப‌டும் த‌னிம‌னித‌ வ‌ள‌ர்ச்சி குறியீட்டில் 2006 ம் ஆண்டில் 126 வ‌து இட‌த்திலிருந்த‌ இந்தியா 2007 ல் 128 வ‌து இட‌த்தில் த‌ள்ள‌ப் ப‌ட்டிருக்கும் இவ்வேளையில். த‌வ‌றான‌ வ‌ளர்ச்சியை காட்டி தேர்த‌லில் மோடி பெற்றிருக்கும் வெற்றி ம‌ற்ற‌ மாநிலங்களின் அர‌சிய‌லிலும் பொருளாதாரக் கொள்கைகளிலும் எந்த விதமான தாக்கத்தை எற்படுத்துமோ என்கிற அச்சம் எழவேச் செய்கிறது.


வளர்ச்சி என்பது நகர்ப்புறங்களில் எல்லாரும் பிட்சா சாப்பிடுவதுதான் என்ற எண்ணம் கொண்டவர்கள் இருக்கும்வரை மோடிப் போன்றவர்கள் வளர்ச்சி மாயையைக் காட்டி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவது தொடரத்தான் செய்யும்.


வாழ்க ஜனநாயகம்!

2 comments:

ஜமாலன் said...

முக்கியமான ஓரு கருத்தை நுட்பமாக ஆய்வு செய்துள்ள உங்களது அசத்தலான பார்வை அருமை. இதுபோன்ற யதார்த்தை சொல்லும் எழத்துக்கள் அவசியம். ஏன் இது குறித்து எந்த பின்னோட்டங்களும் இல்லை என்பது தெரியவில்லை. அருமையான விபரங்களுடன் ஆழமாக எழுதப்பட்டடுள்ளது. பாராட்டுக்கள். உங்களது பொருளியல் ஆய்வுப் பார்வை அருமையாக உள்ளது. தொடர்ந்து இதுபோன்ற ஆழ்ந்த பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

உறையூர்காரன் said...

வருகைக்கு நன்றி ஜமாலன்,

ஆய்வு செய்தது நானல்ல. என்னுடைய நண்பர் ஒருவர் அனுப்பிய ஈ மெயிலின் தமிழாக்கமே இந்தப் பதிவு.